மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டிச் சாரதியிடம் கொள்ளை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி நூதமான முறையில் நகைகள், கைத்தொலைபேசி, பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

கொடிகாமத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரே நகைகள், கைத்தொலைபேசி, பணம் என்பவற்றை இழந்துள்ளார்.

கொடிகாமம் முச்சக்கர வண்டித் தரிப்பிடத்திலுள்ள முச்சக்கர வண்டி ஒன்றைக் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 24) ஒருவர் தொலைபேசி அழைப்பின் ஊடாக வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.

பின்னர் அந்த முச்சக்கர வண்டி நீண்டநேரமாக தரிப்பிடத்துக்குத் திரும்பவில்லை. இந்தநிலையில், அந்த முச்சக்கர வண்டி கோயிலாக்கண்டி பகுதியில் விபத்தில் சிக்கிய நிலையில் காணப்பட்டது. சாரதி மயக்க நிலையில் காணப்பட்டுள்ளார்.

அந்த வீதியால் சென்றவர்கள் சாரதியை மீட்டு, பூநகரி வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். பின்னர் அவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

சாரதி அணிந்திருந்த மோதிரம் மற்றும் பணம், கைத்தொலைபேசி என்பன அபகரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.

முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்திச் சென்றவர் சாவகச்சேரியில் உள்ள உணவகம் ஒன்றில் சாரதிக்கு தேநீர் வாங்கிக் கொடுத்துள்ளமை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பாதுகாப்புக் கமராப் பதிவுகள் பொலிஸாரால் எடுக்கப்பட்டுள்ளன. அந்தத் தேநீரில் சாரதிக்கு மயக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகின்றது.

பாதுகாப்புக் கமராப் பதிவுகளைக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆயினும் இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பாக எவரும் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை. நேற்று கொடிகாமம் பொலிஸ் நிலையம் முன்பாக கூடிய கொடிகாமம் முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டிச் சாரதிகள் பொலிஸார் அசமந்தமாகச் செயற்படுகின்றனர் என்று குற்றஞ்சாட்டினர்.

Share this Article