யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக்கண்ணாடிகளை வழங்கும் திட்டத்தின் கீழ், கண் பரிசோதனை மற்றும் பயனாளிகளைத் தெரிவுசெய்யும் நடவடிக்கை நேற்று (14/11) பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ், ஜனாதிபதி நிதியத்தின் புதிய திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மூக்குக்கண்ணாடிகள் தேவைப்படும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இலவசமாக அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 800 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் மூக்குக்கண்ணாடிகள் தேவைப்படுவதாக அடையாளம் காணப்பட்ட 526 மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் இலவசமாக மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.
இத்திட்டத்திற்கு ஐக்கிய இராச்சியத்தின் Stroud Rotary Club மற்றும் Wish Foundation ஆகியன அனுசரணை வழங்குகின்றன.
இத்திட்டத்தின் முதலாவது கட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்திலும், இரண்டாவது கட்டம் றுகுணு பல்கலைக்கழகத்திலும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே, யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் எம். பிரதீபன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் டி. வேல்நம்பி உள்ளிட்ட பீடாதிபதிகள், பல்கலைக்கழகப் பணியாளர்கள் மற்றும் பெருமளவிலான மாணவர்கள் கலந்துகொண்டனர்.