அமைச்சர் பந்துல நெடுந்தீவுக்கு வர ஸ்ரீதரன் எம்.பி.நிபந்தனை!

Anarkali
Anarkali  - Senior Editor
2 Min Read

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு வருவதாகத் தெரிவித்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அங்கு வருவதற்கு சிறிதரன் எம்.பி. சில நிபந்தனைகளை விதித்தார்.

பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல வினா விடைக்கான நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான சிறிதரன் முன்வைத்த நெடுந்தீவின் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன பதிலளித்தார்.

நெடுந்தீவின் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் கேள்வியெழுப்பிய சிறிதரன் எம்.பி நெடுந்தீவு பிரதேசம் தனித்த தீவாக காணப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 16 கடல் மைல் தொலை துரத்தில் இந்தத் தீவு உள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒரு பஸ் மாத்திரமே உள்ளூர் போக்குவரத்து சேவையில் உள்ளது.
அந்த பஸ் பழுதடைந்தால் அன்றைய தினம் அப்பிரதேசத்தின் உள்ளூர் போக்குவரத்து சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும்.

நெடுந்தீவு பகுதிக்கு ஒற்றை கதவு உள்ள ஒரு பஸ் ஆவது வழங்குங்கள் என்று பலமுறை வலியுறுத்தியும் இதுவரை அதற்கு தீர்வு கிடைக்கவில்லை. அதேபோல் 14 கிலோமீற்றர் வீதியில் 3 கிலோமீற்றர் வீதிக்கு மாத்திரமே வரலாற்றில் முதல் தடவையாக கொங்றீட் போடப் பட்டுள்ளது -என்றார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நான் கல்வி அமைச்சராக பதவி வகித்த போது நெடுந்தீவுக்கு சென்றிருக்கிறேன்.

இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் கிடைக்கப் பெற்ற பஸ்களில் 15 பஸ்கள் யாழ்ப்பாணம் டிபோக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆகவே யாழ்ப்பாணம் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு வருகை தருவேன்.அப்போது நேரடி கள ஆய்வில் ஈடுபடுவேன்- என்றார்.

மீண்டும் எழுந்த சிறிதரன் எம்.பி. யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவுக்கு படகு சேவை பலவீனமான நிலையில் உள்ளது. வடதாரகை படகு சேவை கடந்த 4 மாத காலமாக சேவையில் இல்லை. நெடுந்தாரகை படகு சேவை பலவீனமான தன்மையில் உள்ளது.குழுதினி படகு சேவை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதுவும் 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வழங்கப்பட்டது.
ஆகவே நெடுந்தீவுக்கான படகு சேவை ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த படகு பழுதடைந்தால் அன்றைய தினம் அப்பிரதேசத்திற்கான போக்குவரத்து சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும் ஆகவே குறிக்கட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு பாதுகாப்பான படகு சேவை நேர அட்டவணையின் பிரகாரம் நடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெடுந்தீவில் சுமார் 5000 பேர் வாழ்கிறார்கள். போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகளால் இப்பிரதேச மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.நான் குறிப்பிடுவது பொய் என்றால் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதியிடம் தொடர்பு கொண்டு பேசுங்கள் என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிட்டது பொய் என்று நான் குறிப்பிடவில்லை. வெகுவிரைவில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவேன். நெடுந்தீவுக்கு செல்வேன் அப்போது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் என்னுடன் வருகை தர வேண்டும் -என்றார்.

இதன்போதே நெடுந்தீவுக்கு வருவதாக நீங்கள் குறிப்பிட்டது முக்கியமானது.ஆனால் நீங்கள் கடற்படையின் படகில் நெடுந்தீவுக்கு செல்லக் கூடாது. அப்பிரதேச மக்கள் பயன்படுத்தும் படகில் தான் செல்ல வேண்டும்.அதே போல் நெடுந்தீவுக்கு சென்ற பின்னர் முச்சக்கர வண்டி சிறிய உழவு இயந்திரத்தில் பயணம் செய்ய வேண்டும்.அப்போது தான் உண்மை பிரச்சினை உங்களுக்கு விளங்கும்- என்றார்.

Share this Article