சஜித் அல்லது நாமலே அடுத்த ஜனாதிபதி – ஹிருணிகா

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச அல்லது, நாமல் ராஜபக்சவே நிச்சயமாக நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார். மாறாக, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீண்டும் ஒருமுறை அதிகாரத்திற்கு வரமாட்டார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரா தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் தன்னிச்சையான மற்றும் ஒரு தலைப்பட்சமான செயற்பாடுகளுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்குத் தான் எப்போது தலைவணங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிடும் அதேவேளை, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது பல்வேறு தரப்பினரும் நம்பிக்கை கொண்டிருந்தாலும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் யாவும் பிற்காலத்தில் ஆட்சியாளர்களுக்கே எதிராக மாறியதைப்போல, தற்போதைய அரசாங்கத்திற்கும் எதிர்காலத்தில் இந்தச் சீர்திருத்தங்கள் பிரச்சினையாக மாறக்கூடும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளுக்கும், சூத்திரதாரிகளுக்கும் முறையான தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதில் நாட்டு மக்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறோம்.

மேலும், எதிர்காலத்தில் வரக்கூடிய அரசியல் மாற்றங்களின் போது, தற்போதைய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு மக்கள் சஜித் பிரேமதாச அல்லது நாமல் ராஜபக்ச போன்ற மாற்றுத் தலைவர்களை நோக்கிச் செல்லக்கூடும், மாறாக தற்போதைய ஆட்சியாளர்களை மக்கள் எவ்வாறு அணுகுவார்கள் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

ஒரு நாட்டில் உண்மையான ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் அங்கு பலமானதொரு எதிர்க்கட்சி இருப்பது அவசியமாகும். ஆனால், தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தொடர்ச்சியாக இலக்கு வைத்து, அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் ஊடாக அவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் ஊடகவியலாளர்கள் மற்றும் சாதாரண பொதுமக்களும் கூட கடுமையான விமர்சனங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுக்க நேரிடுகிறது.

சில சர்வாதிகார மற்றும் சட்டத்துக்கு எதிரான கொள்கைகள் கொண்ட நாடுகளைப் போல, சமூக வலைத்தளங்கள் மற்றும் கருத்துச் சுதந்திரம் படிப்படியாகக் கட்டுப்படுத்தப்பட்டு, மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் ஆபத்து தற்போது காணப்படுகிறது. இலங்கை நாட்டு மக்கள் எத்தகைய கடினமான சூழ்நிலைகளையும் நீண்ட காலம் பொறுத்துக்கொள்ளக்கூடிய சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்றாலும், இந்த அடுக்கு முறைகள் எல்லையைத் தாண்டும்போது மக்களின் கோபம் எரிமலைபோல வெடிக்கும், அந்த நாளில் எந்தவொரு தலைவராலும் மக்களின் எழுச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது போகும் என்றார்.

Share this Article
Leave a comment