வெடியரசன் கோட்டை வரலாற்றை திரிபுபடுத்தும் முயற்சியா? – மக்கள் விசனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
2 Min Read

நெடுந்தீவு மேற்கில் சிதைவடைந்த நிலையில் காணப்படும் புராதன வெடியரசன் கோட்டை பாகங்களைப் பௌத்த தாதுகோபத்தின் எச்சங்களாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் நெடுந்தீவில் முழு வீச்சில் நடைபெறுகின்றன.

இந்தக் கோட்டையின் வரலாற்றைத் திரிவுபடுத்தும் நொக்குடன் நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையிலும், கோட்டை காணப்படும் இடத்திலும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் கோட்டையின் பாகங்கள் பௌத்த தாதுகோபத்தின் எச்சங்கள் என்று திடீரென விளம்பரப் பலகைகள் முளைத்துள்ளன.

இந்த விளம்பரத்தில், பல்வேறு தொல்பொருள் கலைப்பொருள்கள் டெல்ப் தீவில் உள்ளன. மற்றும் பழங்கால மதிப்புள்ள மூன்று தூபிகள் இங்கு காணப்படுகின்றன. இந்தத் தூபிகள் வெவ்வேறு அளவுகளில் காணப்படுகின்றன. மிகப்பெரிய தூபியின் கல்லறையில் மூன்று கல்வெட்டுக்கள் காணப்பட்டன.

பெரியதூபியின் விட்டம் 13.54 மீற்றர். அதன் சுற்றளவு 31.93 மீற்றர். கல்வெட்டுக்களில் ஒன்று பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. பிராமி கல்வெட்டு கி.பி. 1 முதல் 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்றும் சிங்கள பிராகிருதத்தில் எழுத்தப்பட்டது என்றும் கல்வெட்டு நிபுணர்கள் நம்புகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விளம்பரப் பலகையில் பௌத்த இடிபாடுகளைக் கொண்ட இந்தத் தளம் டெல்ப் தீவின் புராதன பௌத்த தளம். இது கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. பெரிய தூபி பவளக் கல்லால் ஆனது. ஏனைய இரு தூபிகளும் கிழக்கு, மேற்காக உள்ளன என்று குறிக்கப்பட்டுள்ளது.

இந்த புராதன தளமானது வெடியரசன் மன்னனின் வரலாற்றுடன் தொடர்புபட்டது என்றும், இவை தொடர்பான வரலாற்றுப் பதிவுகள் பல்வேறு புராதன தமிழ் ஆவணங்களில் காணப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இந்த நடவடிக்கை திட்டமிட்டவகையில் தமிழ் வரலாற்றை திரிவுபடுத்தும் பௌத்த ஆக்கிரமிப்பு என்று தெரிவித்துள்ளனர்.

இந்த விளம்பரப் பலகைப் பொருத்துவதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ள மக்கள், உரிய அதிகாரிகள் இது தொடர்பில் ஏன் கவனம் செலுத்தாது உள்ளனர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விடயத்தில் வடக்கில் உள்ள வரலாற்றுப் பேராசிரியர்கள், பல்கலைக்கழகச் சமூகம், புத்திஜீவிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி – தினக்குரல் / 13.03.2023

Share this Article