யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் வைத்தியர் தயாளினி திலீபன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் உத்தியோகபூர்வ குற்றப்பத்திரத்தை காவற்துறையினர் யாழ் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களான கொலையான விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் ஆகிய இருவரும் நேற்றைய தினம் திங்கட்கிழமை (05/10) பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இக் குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
வழக்கில் முன்னெடுக்கப்பட்ட விரிவான புலன்விசாரணைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரத்தை வழக்குப் பொறுப்பு அதிகாரிகள் நீதிமன்றில் முறைப்படி கையளித்தனர். தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை அடுத்த வழக்கு தவணையின் போது சந்தேகநபர்களுக்கு மன்றில் வாசித்துக் காண்பிக்கப்படும் என நீதவான் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சந்தேகநபர்களுக்கு எதிரான சுருக்கமுறையற்ற ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிமன்றம், வழக்கினை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளரான வைத்தியர் தயாளினி திலீபன் (வயது 54), கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதலில், மார்ச் 21ஆம் திகதி தனங்கிளப்பு காட்டுப் பகுதியிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.
இக் கொலைச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர், உயிரிழந்த விரிவுரையாளரின் சொந்த மகள் மற்றும் மருமகனைக் கைது செய்தனர். அவர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.