நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் தயாரிக்கப்படும் நெடுந்தீவின் 5 வருட அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் ஆய்வுச் செயற்பாடு இன்று (செப்ரெம்பர் 8) ஆரம்பமாகியுள்ளது.
நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் நெடுந்தீவை அபிவிருத்தி நோக்கிய பாதையில் இட்டுச் செல்வதற்காக அடுத்துவரும் 5 ஆண்டுக்கான அபிவிருத்தி செயற்றிட்டம் ஒன்றை தயாரித்து ஆவணப்படுத்தும் வகையில் அதன் ஆலோசகர்களான திரு.ம.செல்வின் இரேனியஸ், திரு.வை.ஜெயமுருகன், திரு.மு.அமுதமந்திரன் ஆகியோரின் வழிநடத்தலின் கீழ் நெடுந்தீவின் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் இணைந்து அவர்களின் கருத்துக்களை வழங்கி நெடுந்தீவு பிரதேச செயலாளரின் ஒழுங்குபடுத்தலின் கீழ் முன்னோடி கருத்தரங்கு இன்று நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது நாளை (செப்ரெம்பர் 9) யாழ் பல்கலைக்கழக புவியியல் துறையின் பிராந்திய அபிவிருத்திப் பிரிவு விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களின் ஊடாக நெடுந்தீவு மக்களின் தேவைகளை இனங்கண்டு நிவர்த்தி செய்யும் வகையில் 5 ஆண்டுகளிற்கான நெடுந்தீவின் அபிவிருத்திச் செயற்திட்டம் தயாரித்தலுடன் கிராமிய ஆய்வு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே நாளை நெடுந்தீவின் 6 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஊர்மக்கள் மற்றும் அந்தந்த பிரிவுகளில் அரச, அரச்சார்பற்ற, சமூக அமைப்புக்களுடனும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், கிராம சேவையாளர்கள், பொருளாதார அவிருத்தி உத்தியோகர்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பு பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
எனவே ஊர்மக்கள் அனைவரும் இதில் பங்குகொள்ளுமாறு நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.