நெடுந்தீவில் மணல் கொள்ளை உடனடியாக தடுக்கக்கோரி கூட்டமைப்பினர் பொலிசில் முறைப்பாடு 

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
சுற்றுலா துறைக்கு பெயர்போன நெடுந்தீவு கிராமத்தில் மணல் அகழ்வு முற்றாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு மேற்கு J / 2 கிராம சேவகர் பிரிவிலுள்ள சென் லோறன்சியார் தேவாலயத்தினை அண்டியுள்ள கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுவருகின்றது .
புகழ்பெற்ற கச்சதீவு கிராமமும் இந்த கிராம சேவகர் பிரிவின் நிர்வாகத்தினுள்ளேயே அடங்குவதாகவும் கூறப்படுகின்றது .
நூறு மீற்றர் நீளமான பகுதியில் மூன்று அடி ஆழம் வரைக்கும் மணல் அகழப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது .
உழவு இயந்திரம் , மற்றும் லன்ட் மாஸ்ரர் வாகனங்களில் மணல் எடுத்துச்செல்லப்படுவதாகவும் நெடுந்தீவு பிரதேச சபையிலுள்ள ஆளும் தரப்பு கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரின் ஆதரவுடனேயே மேற்படி நாசகார செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் . அத்தோடு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற பத்திரிகையொன்றும் அவ்வாறே குற்றஞ்சாட்டியுள்ளது .
கடந்த 17 – 05- 2021 அன்று வெளியான மேற்படி பத்திரிகையில் வெளியாகியிருந்த செய்தியை கண்ணுற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீவக கிளையின் முக்கிய உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம் , கருணாகரன் நாவலன் மற்றும் கருணாகரன் குணாளன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு அன்றைய தினமே சென்று பார்வையிட்டிருந்தனர் . இவர்களோடு தமிழ் அரசுக் கட்சியின் நெடுந்தீவு கிளை உறுப்பினர்களான மதுவண்ணன் , ருத்ரன் , ரத்தினம் போன்றவர்களும் மணல் அகழ்வு நடைபெற்றுள்ள கடற்கரையினை பார்வையிட்டிருந்தனர் .
மேற்படி பத்திரிகை செய்தி வெளியாகிய மறுகணமே கடற்கரையில் தோண்டப்பட்ட குழிகளை மூடி மறைக்கும் செயற்பாட்டில் மணல் கொள்ளையர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் , மேற்படி மணல் அகழ்வினால் கடல்நீர் முழுவதும் கிராமத்தினுள் ஊடுருவும் நிலை காணப்படுவதாகவும் உடனடியாக மேற்படி சட்டவிரோத செயற்பாட்டினை பொலிசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதோடு மணல் கொள்ளையர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டுமென்றும் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊர்காவற்துறை தொகுதி கிளையினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
Share this Article