நெடுந்தீவில் மட்டுமே காணப்படும், அழிவின் விளிம்பில் உள்ள அரிய Indian Courser பறவையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மண்கும்பான் பிள்ளையார் கோவிலின் முன்பாக விழிப்புணர்வு பலகை ஒன்று நாட்டப்பட்டது.
Indian Courser என்பது மிக அபூர்வமானதும், அழிந்து போகும் ஆபத்து நிலைமையில் உள்ள பறவையாகும். இதன் இருப்பை பாதுகாக்கும் நோக்கில் CCH நிறுவனம், இயற்கை ஊக்குவிப்பு கழகம் மற்றும் Dialog நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
மேலும், இந்த முயற்சிக்கு நெடுந்தீவு பிரதேச செயலகம், வட மாகாண சுற்றுலா பணியகம், நெடுந்தீவு மற்றும் வேலணை பிரதேச சபைகள், நீர்ப்பாசனப் பொறியியல் அலுவலகம் ஆகியனவும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன.
இதன்படி, நேற்றுமுந்தினம் (ஒகஸ்ட் 09) வேலணை பிரதேசத்தின் மண்கும்பான் பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட அரச நிலத்தில், குறித்த பறவையின் இருப்பை உறுதி செய்யும் விழிப்புணர்வு பலகை நிறுவப்பட்டது.

இந்த நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலர், நெடுந்தீவு மற்றும் வேலணை பிரதேச சபைகளின் தவிசாளர்கள், வேலணை பிரதேச சபை உறுப்பினர், அதிகாரிகள், Dialog நிறுவனம் மற்றும் இயற்கை ஊக்குவிப்பு கழகத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.