கவிஞர் ஈழபாரதியின் கவிதை நூல் அறிமுக விழா நெடுந்தீவில் சிறப்பாக நடைபெற்றது!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

நெடுந்தீவு மண்ணின் மைந்தனும் தற்போது புலம்பெயர் தேசத்தில் வசிப்பவருமான கவிஞர் ஈழபாரதியின் “ஐந்திணை நிலமும் ஆறாம் திணைஅகதியும்” என்ற கவிதை நூலின் அறிமுக விழா இன்றையதினம் (மே 21) நெடுந்தீவில் சிறப்பாக நடைபெற்றது.

நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நெடுந்தீவு கலாச்சார உத்தியோகத்தர் அ.சிவஞானசீலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் திருமதி நிவேதிகா கேதீசன்அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக நெடுந்தீவு பங்குத்தந்தை ப. பத்திநாதன் அடிகளார், நெடுந்தீவு மகாவித்தியாலய ஆசிரியர் பங்குத்தந்தை சோபன் றூபஸ் அடிகளார், ஆசிரியை திருமதி தனுஷா கிருசாந்தன் மற்றும் ஈழ பாரதியின் சகோதரன் எட்வேட் அன்ரனி நியூட்டன்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தினை தொடர்ந்து மங்கல ஒளியேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. றோ.க. மகளிர் கல்லூரி மாணவியின் வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து வரவேற்புரையினை நெடுந்தீவு பிரதேச செயலக மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி வேஜினி ஜெயகாந்தன் வழங்கியிருக்க, வாழ்துரைகளை விருந்தினர்களுடன் இணைந்து ஈழபாரதியின் நண்பர் பிறேம் யூட்குமார் வழங்கியிருந்ததுடன் , நிகழ்வுக்கான சிறப்புபாடலினை பாடகர் புலேந்திரன் அன்ரனி தேவராஜ் வழங்கியிருந்தார்.

“ஐந்திணை நிலமும் ஆறாம் திணை அகதியும்” கவிதை நூலினை நெடுந்தீவு பிரதேச செயலர் அறிமுக வெளியீட்டினை செய்ய அதன் முதற்பிரதியினை நெடுந்தீவு மகாவித்தியாலய ஆசிரியர் பங்குத்தந்தை சோபன் றூபஸ் அடிகளார் பெற்றுக்கொண்டதுடன் தொடர்ந்து விருந்தினர்களுக்கு சிறப்பு பிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டது.

நூல் அறிமுக வெளியீட்டு உரையினை நெடுந்தீவு மகாவித்தியாலய ஆசிரியை திருமதி தனுஷா கிருசாந்தன் அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏற்புரையினை கவிஞர் ஈழபாரதி அவர்கள் புலம்பெயர்தேசத்தில் இருந்து நேரலையூடாக வழங்கியிருந்தார்.

இன்றைய நூல் அறிமுக நிகழ்வுக்கான நிகழ்ச்சித் தொகைப்பாளராக, அறிவிப்பாளர் செல்வி ஜோசெப் றுபினா சிறப்பாக வழங்கியிருந்தார்.

நிகழ்வில் அழைக்கப்பட்ட விருந்தினர்கள், ஆர்வலர்கள்,  பிரதேச செயலக அலுவலர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

கவிஞர் ஈழபாரதியின் “ஐந்திணை நிலமும் ஆறாம் திணை அகதியும்” நூல் வெளியீட்டு விழாவை எமது  YouTube நேரலையில் பார்வையிடலாம்.

📺 நேரலை இணைப்பு: https://www.youtube.com/live/FVI-PoNhf2E

Share this Article