அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட 3 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. நான்கு படகுகள் தொடர்பாக தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் 17 படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று (ஜனவரி 27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

படகுரிமை வழக்குக்காக இராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்கள் கொண்ட குழு நேற்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

படகுகளுக்கான உரிமை கோரும் மூன்று வழக்குகளில் உரிமையாளர்கள் முன்னிலையாகாததால், மூன்று படகுகளும் அரசுடைமையாக்கப்படுவதாக ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

2021 டிசெம்பர் மாதம் கைப்பற்றப்பட்ட இந்தப் படகுகள் தொடர்பில் இதற்கு முன்னர் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போதும், படகு உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

மேலும் நான்கு படகுகளுக்கான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவற்றின் உரிமையாளர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

வழக்கின் சாட்சியாளர்களிடம் நேற்று மன்றில் சாட்சியம் பெறப்பட்டதுடன், சாட்சியை சட்டத்தரணி அருட்பிரகாசம் நிரோசன் மன்றில் நெறிப்படுத்தினார் சாட்சியங்களை ஆராய்ந்த நீதவான் இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

மன்றில் முன்னிலையாகியிருந்த நான்கு படகுகளின் உரிமையாளர்களின் வழக்கு ஜனவரி 31 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அன்று படகின் உரிமையாளர்களை மன்றில் முன்னிலையாக வேண்டும் என்றும் நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

Share this Article