நெடுந்தீவில் வரவிருக்கும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட சுகாதார நடமாடும் சேவையை முன்னிட்டு துறைசார் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகளுடனான முன்னோடியான கலந்துரையாடல் நேற்று (ஒகஸ்ட் 19) செவ்வாய்க்கிழமை நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலுக்கு நெடுந்தீவு பிரதேச செயலாளர் திருமதி நிவேதிகா கேதீசன் தலைமை தாங்கினார். பிராந்திய சுகாதார பணிப்பாளர் திரு. ஆ. கேதீஸ்வரன் நிகழ்வு தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கியதுடன், வேலணை மற்றும் ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச வைத்திய அதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் பிரதேச சபை உறுப்பினர்கள், பொலிசார், கடற்படை அதிகாரிகள், பாடசாலை சமூகத்தினர், நெடுந்தீவு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், ஆயுர்வேத வைத்தியர், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் செயலக உத்தியோகத்தர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
சுகாதார நடமாடும் சேவையை முன்னிட்டு தரவு சேகரிப்பு மற்றும் முன்னோடியான பணிகளில் ஈடுபடும் நோக்கில் சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் ஏற்கனவே நெடுந்தீவில் தங்கி செயற்பட தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.