நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றிற்கு 2025 ஆம் ஆண்டுக்கான மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கல் தொடர்பான விசாரணை ஒன்று இன்றையதினம் (மார்ச் 04) இலங்கை மதுவரி திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற விசாரணை மதியம் 2.30 மணிவரை நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தக நிறுவனத்திற்கு 2024 இறுதிப் பகுதியில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதியினை 2025 இற்கும் தொடர்ந்து நீடிக்காமல் நிரந்தரமாக இரத்துச் செய்யக்கோரி நெடுந்தீவிலுள்ள ஆறு அமைப்புகள் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் முறைப்பாட்டு மனுக்களை கையளித்திருந்த நிலையிலேயே அது தொடர்பில் விசாரணைகள் இன்று இடம்பெற்றது.
இதன்போது நெடுந்தீவு பிரதேச செயலர், யாழ் மதுவரி அத்தியட்சகர் அலுவலக – மதுவரி அத்தியட்சகர், யாழ் மதுவரி நிலைய – மதுவரி பெறுப்பதிகாரி மற்றும் முறைப்பாட்டாளர்கள், தனியார் விருந்தக நிறுவன உரிமையாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.