வவுனியாவில் வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதல்!- இளம் பெண் தீயிட்டு எரிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வவுனியாவில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொலைவெறிக் கும்பல் ஒன்று அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு நடத்தியதுடன், 21 வயதான இளம் பெண் ஒருவரைத் தீயிட்டு எரித்துக் கொன்றுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று(ஜூலை 23) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வீட்டிலிருந்த சிறுமி ஒருவரின் பிறந்தநாள் நிகழ்வுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்தக் கொலைவெறித் தாக்குதல் சம்பவம் நடந்திருக்கின்றது.

தோணிக்கல் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் சுமார் 10 பேர் கொண்ட கும்பல் கைகளில் வாள்களுடன் வீட்டுக்குள் நுழைந்து தாக்கியது. வீட்டின் உரிமையாளரை இலக்குவைத்தே அந்தக் கும்பல் வந்திருக்கின்றது என்று தெரிகின்றது.

வீட்டின் உரிமையாளர் மீது அந்தக் கும்பல் வாள்வெட்டு நடத்திய நிலையில், அவர் அவர்களிடம் இருந்து தப்பியோடியுள்ளார். தப்பியோடி வீட்டுக்குள் புகுந்து பாதுகாப்புத் தேடியுள்ளார். அந்தக் கும்பல் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களைத் தாக்கியுள்ளது.

வீட்டில் இருந்த பெண்கள், சிறுவர் சிறுமிகளையும் அந்தக் கும்பல் கடுமையாகத் தாக்கியதுடன், வீட்டுக்கும், வீட்டில் இருந்தவர்கள் மீதும் பெற்றோல் ஊற்றித் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

தாக்குதல் மற்றும் எரிகாயங்களுக்கு உள்ளான 21 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர், சிறுவர், பெண்கள் எனப் 10 பேர் வாள்வெட்டு மற்றும் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2 வயதுடைய சிறுவன், 7 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட நான்கு பெண்கள், 42 வயதுடைய ஆண் மற்றும் 36 வயதுடைய ஒருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா மாவட்ட மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share this Article