வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மத ரீதியான பிரச்சினைகளைக் கண்டறிவதற்காக மாகாண மட்டத்தில் மதத் தலைவர்கள் தலைமையிலான குழு அமைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் (ஓகஸ்ட் 28) கண்டிக்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் அனுநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். அங்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பௌத்த மதத் தலங்கள் அனைத்தையும் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்புகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். வடக்கில் குருந்தூர் விகாரையின் பிரச்சினையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
வெளிப்பிரதேசங்களிலிருந்து எவரையும் அழைத்துவர வேண்டாம் என அந்தப் பகுதி சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அந்தப் பகுதி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்துள்ள நிலையில் வெளியிலிருந்து வந்த குழுவினரே முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளனர்.
அது தொடர்பில் வவுனியா மகாநாயக்க தேரருக்கும் தெளிவுபடுத்தியுள்ளோம். அதனால் நாம் வெளியிலிருந்து அந்தப் பிரதேசத்துக்குச் செல்வதற்கு எவரையும் அனுமதிப்பதில்லை. அது தொடர்பிலான விடயங்களைக் கண்டறியுமாறு தொல்லியல் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் சட்டத்துக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கில் இடம்பெறும் அகழ்வுகளின் அறிக்கைகளை பெற்றுக்கொண்டு அந்தப் பணிகளை முன்னெடுப்போம். முன்னைய அரசாங்கம் இராணுவத்தின் உதவியுடன் அகழ்வுகளைத் துரிப்படுத்தியது என்று கூறினீர்கள். இருப்பினும் அந்த ஆய்வு முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை.
தொல்பொருள் திணைக்களம் வழங்கும் தீர்மானத்துக்கு அமைய செயற்பாடுகளை முன்னெடுக்கவும், அந்தப் பகுதிகளைப் பாதுகாக்கவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.
பௌத்த தலங்களைப் பாதுகாக்கும் அதேநேரம் முதலில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு அப்பகுதிகளில் மற்றைய மதம் சார்ந்த பிரச்சினைகள் இருக்குமாயின் அதுபற்றி ஆராயவும் தயாராகவுள்ளோம் – என்றார்.