யாழ்ப்பாணம் மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. அதற்கான வர்தமானி அறிவித்தல், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த டிசெம்பர் மாதம், யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வாக்கெடுப்பின் முதலாவது சமர்ப்பிப்பில் அங்கீகரிக்கப்படாததன் காரணமாக முன்னாள் முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் தனது பதவியிலிருந்து விலகினார்.
அதையடுத்துக் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற முதல்வர் தெரிவில் இ. ஆனோர்ட் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது.
அவரது நியமனம் தொடர்பாக கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் தனது 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த 14ஆம் திகதி சமர்ப்பித்தார். வாக்கெடுப்பில் பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டது. அதன்பின் பட்ஜெட்டின் இரண்டாவது வாக்கெடுப்பு நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
அதிலும் பட்ஜெட் 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவி விலகினார். அதையடுத்து புதிய முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதேவேளை, நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளது பதவிக் காலம் 2022 மார்ச் மாதம் 18 ஆம் திகதி நிறைவுக்கு வரும் நிலையில், உள்ளூராட்சி சபைகள் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் படி மேலும் ஒரு வருட காலத்துக்கு அதாவது எதிர்வரும் 19 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டிருந்தது.