நெடுந்தீவு மக்களின் தேவைகளுக்கு தீர்வு வேண்டும் – நெடுந்தீவு பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கோரிக்கை!

SUB EDITOR
SUB EDITOR
3 Min Read

நெடுந்தீவு மக்களின்  உடனடித் தேவைகளுக்கு தீர்வு வேண்டி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் வடக்கின் ஆளுநரை இன்று (06/04) அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

நெடுந்தீவு பிரதேச சபையின் உறுப்பினர்களான குணராசா நிசாந்த், மெற்றில்டா பாமினி ஜோர்ஜ் அமலதாசன் , அல்பேட் ஞானறொபட், பேனாட் கஸ்பர்ஸ் தோமஸ் ஆகியோரே இன்று முற்பகல் ஆளுநரை சந்தித்திருந்தனர்.

இந்நிலையில்இச்சந்திப்பு தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை இன்று முன்னெடுத்த அவர்கள் சந்திப்பு தொடர்பில் கூறுகையில்…

எமது பிரதேசம் தற்போது குடிநீர் போக்குவரத்து மற்றும் வீதிகள் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை எதிர்பார்த்திருக்கின்றது.

மூன்று பிரதான கோரிக்கைகளுடன் தீர்வுகளை பெற்றுக்கொள்ளவே நாம் இன்று ஆளுநரை சந்தித்திருந்தோம்.

01.  நெடுந்தீவில் மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் ஏற்கனவே கிழக்குப் பகுதியில் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தது.

இதன்மூலமாக சுமார் 900 இணைப்புகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. எனினும், தற்போது அந்த இயந்திரம் சுமார் நான்கு மாத காலமாக பழுதடைந்துள்ள நிலையில் மீண்டும் குடிநீருக்கான பிரச்சினை எழுந்துள்ளது.

அந்த இயந்திரத்தை திருத்தி அமைத்தல் வேண்டும். அல்லது புதியதொரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்படல் வேண்டும். அத்துடன், அந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரம் இயங்கிய நிலையிலும், சாறாப்பிட்டி மக்களுக்கு குடிநீர்க் கிடைக்காத நிலைமை இருந்தது. எனவே அப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவை கருதி அந்தப் பகுதியிலும் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்படல் வேண்டும்.

அதுவரையில் தற்போதைய நிலையில் எமது மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீரப்பதற்காக வறட்சி நிவாரண அடிப்படையில் பிரதேச சபை வசமுள்ள தண்ணீர்த் தாங்கி வாகனம் மூலமாக சாறாப்பிட்டடி கிணற்றலிருந்து நீரை எடுத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், தற்போது கடற்படையினர் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்ற குடிநீர் விநியோகத்தை மேலும் பரவலாக வழங்குவதற்கு தாங்கள் ஆவண செய்ய வேண்டும்

இதேநேரம் வெல்லை மற்றும் சாறாப்பிட்டி பகுதிகளில் குதிரைகளுக்கான நீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், நீர் வழங்கப்படாமை காரணமாக அங்குள்ள குதிரைகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றன. நெடுந்தீவுக்கே தனித்துவமான தற்போது அரிதாகி வருகின்ற இக் குதிரைகளைப் பாதுகாப்பது எமது உரிமை எனக் கருதுகின்றோம். சுற்றுலாத்துறை சார்ந்தும் குதிரைகள் அதிக ஈர்ப்பினை கொண்டுள்ளன

அத்துடன், அங்குள்ள ஏனைய கால்நடைகளுக்கும் குடிநீர்ப் பிரச்சினை நிலவி வருவதால், பிரதேச சபை மூலமாக இவற்றுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்த தாங்கள் ஆவண செய்ய வேண்டும்.

02.  ஒழுங்குபடுத்தப்பட்ட நேர அட்டவணை இன்மையாலும், அதிகாரிகளின் அசமந்தப் போக்கினாலும் கடல் போக்குவரத்தினால் எமது மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உட்பட்டு வருகின்றனர்.

இன்று காலை  தனியார் படகுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மழையில் நனைந்து மக்கள் செல்ல அரச படகுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படாமல், அவை மிகக் குறைந்த பயணிகளுடன் பயணங்களைத் தொடர்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே சாதாரண மக்களை பாதிப்படைய வைக்காத வகையில் அரச படகுகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

03. உள்ளூர் வீதிகள் தொடர்பிலான பிரச்சினைகள் அதிகளவில் இருக்கின்றன. இதில், மாவிலித்துறை பெரியதுறை பிரதான வீதியின் நடுப்பகுதி இதுவரையில் புனரமைக்கப்படாமல் உள்ளது. இதன் நீளம் 1.7 மீற்றராகும்.

அதேபோன்று, பிரதேச செயலகத்திலிருந்து வெல்லைக்குச் செல்லும் சுமார் 4 கிலோ மீற்றர் வீதி புனரமைக்கப்படாமல் உள்ளது. இவ்வீதிகள் இரண்டும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழுள்ள வீதிகளாகும்.

முதன்மை அடிப்படையில் இந்த இரு வீதிகளையும் புனரமைப்புச் செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்விடயங்கள் தொடர்பில் தங்களது அவதானம் செலுத்தப்பட்டு, உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென எதிர்ப்பார்ப்பதுடன் இந்த சந்திப்பை மேற்கொண்டிருந்தோம்.

எமது கோரிக்கைகள் மற்றும் அவற்றின் நியாயத்தன்மைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய ஆளுநர் குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்திருந்தார் என குறிப்பிட்டனர்.

Share this Article
Leave a comment