திசைகாட்டி அரசை வீட்டுக்கு அனுப்பும் காலம் கனிந்துவிட்டது – சஜித் பகிரங்கம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தற்போதைய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை விவசாயிகளே தொடங்கிவிட்டனர் என்றும், கடந்த காலங்களில் மக்கள் எவ்வாறு தங்களுக்கு எதிராகச் செயற்பட்ட ஜனாதிபதிகளை விரட்டியடித்தார்களோ, அதே கதி இவர்களுக்கும் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அம்பாந்தோட்டை, வீரவில பிரதேசத்தில் நேற்று(16/07) நடைபெற்ற விவசாயிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உரையாற்றுகையில், 

நெல் ஒரு கிலோவை உற்பத்தி செய்ய 137 ரூபா செலவாகும் நிலையில், அரசு 120 ரூபாவையே உத்தரவாத விலையாக வழங்குகின்றது.

இதனால் ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டம் ஏற்படுகின்றது. தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட 150 ரூபா உத்தரவாத விலை வழங்கப்படவில்லை. தரமற்ற உரம் மற்றும் கிருமிநாசினிகளின் இறக்குமதி, உர மானியம் சரியான நேரத்தில் கிடைக்கப்பெறாமை மற்றும் உர உபகரணங்களின் விலை உயர்வு காரணமாக விவசாயிகள் பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ளனர்.

நாட்டின் 30வீதம் முதல் 40வீதம் மக்கள் வறுமையில் வாடுவதற்கு அரசின் தவறான கொள்கைகளே காரணம். விவசாயப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

விவசாய அமைச்சர் ஊடகவியலாளர்களைப் பார்த்து விரல் நீட்டும் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றார். 

கடந்த காலங்களில் மக்கள் எவ்வாறு தங்களுக்கு எதிராகச் செயற்பட்ட ஜனாதிபதிகளை விரட்டியடித்தார்களோ, அதே கதி இவர்களுக்கும் ஏற்படும்.

எத்தகைய தடைகள் வந்தாலும், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

இந்த அரசின் போலியான வாக்குறுதிகளை நம்பி இனியும் ஏமாற வேண்டாம் என விவசாயிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share this Article
Leave a comment