கெஹெலிய உள்ளிட்ட நால்வருக்குப் பிணை – வெளிநாடு செல்ல தடை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தரமற்ற மருந்துகளை இறக்குமதி  செய்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டுத் தொகையை முழுமையாகச் செலுத்தத் தவறிய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட நான்கு பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், குறித்த பிரதிவாதிகள் நால்வருக்கும் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், அதன் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஐவருக்குக் கடந்த மார்ச் மாதம் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது.

இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு 75 மில்லியன் ரூபாவை இழப்பீடாகச் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அதில் 20 மில்லியன் ரூபாவை அவர் ஏற்கனவே செலுத்தியுள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த இழப்பீட்டுத் தொகையை உரிய முறையில் செலுத்தத் தவறியதன் மூலம் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகக் குற்றம்சாட்டி, டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னரே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment