வவுனியாவில் வீதியில் நின்றவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்ட உயர்தர மாணவர்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின் போது பாடசாலைக்கு முன்பாக வீதியில் நின்றவர்களுடன் மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நேற்றுமுன்தினம் (டிசம்பர் 5) மதியம் இடம்பெற்றது.

இதன்போது உயர்தர மாணவர்கள் சொகுசு கார்கள் மற்றும் அதியுயர் வேகம் கொண்ட மோட்டர் சைக்கிள்கள் என்பவற்றுடன் பாடசாலைக்கு வருகை தந்ததுடன், பாடசாலை முன்பாக அவற்றைச் செலுத்தி போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளனர்.

இதன்போது பாடசாலையில் ஏனைய வகுப்பு மாணவர்களை ஏற்ற வந்த பெற்றோர் ஒருவருடன் விபத்து ஏற்பட்டதையடுத்து, பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு அப் பகுதியில் இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்குத் தெரியப்படுத்தியதையடுத்து அந்தப் பகுதிக்குப் பொலிஸார் வருகை தந்து நிலைமையைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது, பாடசாலை வளாகத்துக்குள் இருந்து வருகை தந்து உயர்தர மாணவர்கள் பல தடவைகள் பெற்றோருடன் முரண்பட்ட போதும், பாடசாலை நிர்வாகம் மற்றும் கடமையில் இருந்த பதில் அதிபர், பழைய மாணவர் சங்கத்தினர் ஆகியோர் ஆக்கபூர்வமான நடவடிக்கைளை எடுக்கவில்லை எனவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவில்லை எனவும் அப் பாடசாலையின் பெற்றோர்களும், பாடசாலை சமூகத்தினரும் குற்றம்சாட்டினர்.

அந்த மாணவர்கள் பின்னர் குறித்த சொகுசு கார்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்களில் பயணித்து வைவரவப்புளியங்குளம் பகுதியிலும் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்திக் குழப்பம் விளைவித்தனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Share this Article