வவுனியாவில் சடலங்களாக மீட்கப்பட்ட குடும்பத்தினர் – நீடிக்கும் மர்மம்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வவுனியா குட்செட் வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலங்களாக நேற்றுமுன்தினம் காலை மீட்கப்பட்டிருந்த நிலையில், முந்தைய நாள் இரவு அந்த வீட்டுக்கு ஹை-ஏஸ் வாகனம் ஒன்று வந்து சென்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த வாகனத்தில் வந்தவர்கள் யார் என்பது தெரியாத நிலையில் அது தொடர்பாகப் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் வவுனியா குட்செட் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கணவன், மனைவி, இரு குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தனர். கணவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், மனைவியும் இரு பெண்குழந்தைகளும் உறங்கிய நிலையிலும் உயிரிழந்து காணப்பட்டனர்.

உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா பொதுமருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று சுகாதாரத் துறையினரால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை தாமதமாகியிருந்தது.

அதேவேளை, பொலிஸ் விசாரணையில் குடும்பத்தினர் சடலங்களாக மீட்கப்பட்ட தினத்துக்கு முதல்நாள் இரவு அந்த வீட்டுக்கு ஹை-ஏஸ் ரக வாகனம் ஒன்று வந்து சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம், முதல்நாள் மாலை மனைவி கடையில் ஐஸ்கிறீம் வாங்கிச் சென்றிருந்த நிலையில் வீட்டில் அந்த ஐஸ்கிறீம் கண்டறியப்படவில்லை. இந்த விடயங்கள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share this Article