நெடுந்தீவில் இன்று (மார்ச் 04) காலை பிரதேச செயலகம் முன்பாக பொதுமக்கள் இணைந்து, நெடுந்தீவுக்கு மதுபான விற்பனை நிலைய அனுமதி வழங்கவேண்டாம் எனக்கோரி அமைதிவழி ஆர்ப்பாட்டத்தினை நடாத்தியிருந்தனர்.
நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தக நிறுவனத்திற்கு 2024 இறுதிப் பகுதியில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதியினை 2025 இற்கும் தொடர்ந்து நீடிக்காமல் நிரந்தரமாக இரத்துச் செய்யக்கோரி நெடுந்தீவிலுள்ள ஆறு அமைப்புகள் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் முறைப்பாட்டு மனுக்களை கையளித்திருந்த நிலையிலேயே அது தொடர்பில் இலங்கை மதுவரி திணைக்கள அதிகாரிகள் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் விசாரணையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இப் போராட்டம் இடம்பெற்றது.
இப்போராட்டத்தின் போது
0 எமது குடும்ப விளக்கை அணைத்து விடாதே
0 அரசியல் பேசவில்லை எமது ஆதங்கம் பேசுகிறது
0 நீ அளவு பார்த்து குடித்த மதுநீரை விட பெண்கள் சிந்திய கண்ணீரின் அளவை அளவிட முடியாது
0 போதையை ஒளிப்போம் நல்ல பாதையை அமைப்போம்
0 அதிகாரிகளே எதற்கு விசாரணை மதுவுக்கா?
0 குடியை விடு பிள்ளைகளை படிக்கவிடு
0 அதிகாரிகளே பாடசாலைகளை முடியுங்கள் மதுக்கடைகளை திறவுங்கள்
போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் மக்கள் இணைந்திருந்ததுடன் நெடுந்தீவு பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.
இதேவேளை நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்கு மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கியமை, நெடுந்தீவில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான விற்பனை போன்றவை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா அவர்களிடம் நெடுந்தீவு மகளிர் அமைப்பின் பிரதிநிதிகளால் இதனை நிறுத்தக்கோரிய மனு ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கும் வகையில் வழங்கிவைக்கப்பட்டதுடன் அதனையே வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா அவர்கள் வடமாகாண ஆளுநரிடம் கையளிந்திருந்ததுடன்,
திறக்கப்படவுள்ள மதுபானசாலை மற்றும் நெடுந்தீவில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான விற்பனை போன்றவற்றினை நிறுத்தக்கோரி 2024 ஏப்ரல் 22 ஆம் திகதி நெடுந்தீவில் பொது அமைப்புகள் இணைந்து எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றையும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.