மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, நான்கு ஆக்கிரமிப்பு அலங்கார மீன் இனங்களைத் தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தத் தடைக்கு உட்பட்ட மீன் இனங்கள் Piranha, Knife Fish, Alligator Gar மற்றும் Redline Snakehead ஆகும்.
அதன்படி, இவ்வினங்களை இனப்பெருக்கம் செய்தல், நீர்நிலைகளில் விடுதல், கரைக்கு கொண்டு வருதல், எடுத்துச் செல்லுதல், வாங்குதல், விற்பனை செய்தல், விற்பனைக்காக காட்சிப்படுத்துதல், ஏற்றுக்கொள்ளுதல், வைத்திருத்தல், இறக்குமதி செய்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் ஆகியவை முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இத்தடை உயிருடன் உள்ள மீன்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மேலும், 1998 ஆம் ஆண்டு இலங்கை மீன்வளர்ப்பு மேம்பாட்டுச் சட்ட எண் 53ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தேசிய மீன்வளர்ப்பு மேம்பாட்டு ஆணைக்குழுவின் (NAQDA) அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே, நுகர்வுக்காக இயற்கை நீர்நிலைகளில் இருந்து உயிருள்ள மீன்களைப் பிடிக்கலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது.
வர்த்தமானி அறிவிப்பின் படி, இம்மீன்கள் வேகமாக இனப்பெருக்கம் செய்து பரவி, பிற நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் அவை “ஆக்கிரமிப்பு இனங்கள்” என வகைப்படுத்தப்பட்டுள்ளன.