யாழ்ப்பாணத்திற்கும் குறிகாட்டுவானுக்கும் இடையே சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து உண்மையலேயே நீண்டதூர பயணத்திற்கு ஏற்றவகையில் இல்லாதபோதும் புதிய பேருந்து போன்று வர்ணம் பூசப்பட்டு சேவையில் ஈடுபடுத்தி மக்களை பல அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் நிலை கடந்த சில வாரங்களாக தொடர்கிறது.

யாழில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட வேண்டிய பேரூந்து சுமார் 10 நிமிடங்கள் முன்னதாகவே எந்தவித அறிவித்லுமின்றி கடந்த 03 நாட்களாக புறப்பட்டு செல்கின்றமையால் நெடுந்தீவு பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
வழமையான நேரத்திற்கு முன்னதாக செல்வதற்கான காரணத்தினை வினவினால் குறித்த பேரூந்து வேகமாக செல்லமுடியாதமையால் நெடுந்தீவுக்கான முதலாவது படகிற்கான பயணிகளை கொண்டுசேர்க்க முடியவில்லை எனவும் அதனாலேயே முன்கூட்டியே பயணத்தை ஆரம்பிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது விடயம் தொடர்பில் நெடுந்தீவுக்கான அதிகாரிகள் அக்கறை எடுத்து மாற்று பேரூந்தினை உரிய நேரத்திற்கு சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென அன்றாடம் துன்பப்படும் மக்கள் கோரிக்கைவிடைத்துள்ளனர்.
இந்த சேவையினூடாக நெடுந்தீவு மக்கள் , நெடுந்தீவுக்கான அரச பணியாளர்கள், நயினாதீவு மக்கள் மற்றும் புங்குடுதீவுக்கான ஆசிரியர்கள் என பலரும் பயணம் செய்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.