தமிழர் தேசம் சிங்களமயமாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் – இரா.சம்பந்தன் வலியுறுத்து

Anarkali
Anarkali  - Senior Editor
2 Min Read

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கை பௌத்த – சிங்கள மயமாக்கும் நோக்குடன் அரசு செயற்படுகின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காமல் அரசு இழுத்தடிக்கின்றது. இந்த விடயங்களில் இலங்கை அரசுக்குச் சர்வதேச நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கனேடியத் தூதுவர் மற்றும் இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள இரா.சம்பந்தன் வீட்டுக்கு கடந்த வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்குச் சென்ற இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ், சம்பந்தனுடன் ஒரு மணிநேரம் பேச்சு நடத்தினார். அதன்பின்னர் மாலை 5.30 மணிக்குச் சென்ற இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபன்ஸும் சம்பந்தனுடன் ஒரு மணிநேரம் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்புக்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கைக்கான புதிய கனேடியத் தூதுவரையும், புதிய ஆஸ்திரேலியத் தூதுவரையும் இன்று வியாழக்கிழமை (நேற்று) சந்தித்தோம். இந்தச் சந்திப்பு மிகவும் திருப்திகரமாக இருந்தது.

இன்றைய அரசியல் நிலைமை, அரசியல் தீர்வு சம்பந்தமான நிலைமை, பொருளாதார நெருக்கடி நிலைமை, நாட்டைவிட்டு பெருமளவிலான மக்கள் வெளியேறும் நிலைமை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசினோம்.

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கை பௌத்த – சிங்கள மயமாக்கும் நோக்குடன் அரசு செயற்படுகின்றமை, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காமல் அரசு இழுத்தடிக்கின்றமை தொடர்பிலும் பேசினோம்.

அரசு கடும் போக்குடன் செயற்படுவதால் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் தமிழர் தாயக ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தவும், அரசியல் தீர்வை வென்றெடுக்கும் எம்மாலான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றோம். இந்தக் கருமம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இதற்கு சர்வதேச நாடுகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கனேடிய, ஆஸ்திரேலியத் தூதுவர்களிடம் எடுத்துரைத்தோம்.

அதேவேளை, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசுக்குச் சர்வதேச நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம் என்று இரா சம்பந்தன் இந்தச் சந்திப்புத் தொடர்பில் தெரிவித்தார்.

Share this Article