சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கான விமான சேவைகள் ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஐரோப்பாவில் குளிர்காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தின் ஏடல்வைஸ் விமான நிறுவனம் இலங்கைக்கான தனது குளிர்கால விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, அந்நிறுவனத்தின் முதலாவது விமானம் இன்று செவ்வாய்க்கிழமை (27/10) காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

ஏ-340 ரக விமானம் மூலம் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சேவை, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிலிருந்து இன்று காலை 7.50 மணியளவில் 290 பயணிகள் மற்றும் 16 விமானப் பணியாளர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இலங்கைக்கான குளிர்கால விமான சேவைகளில் ஏ-340 ரக விமானங்களுடன் ஏ-350 ரக விமானங்களையும் பயன்படுத்த ஏடல்வைஸ் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை முதல் 2027ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி வரை சூரிச் நகருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கும் இடையில் மொத்தம் 65 விமானச் சேவைகளை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் சூரிச் – கட்டுநாயக்க இடையிலான விமானச் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முதலாவது விமானத்தில் வருகை தந்த பயணிகளை வரவேற்பதற்காக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபையின் அதிகாரிகளும், விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தனர்.

Share this Article
Leave a comment