நவம்பர் 2ம் தேதியை சகல ஆன்மாக்கள் தினம், உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்மாக்கள் தினம், மரித்தோர் தினம், இறந்தோர் தினம் என பலவிதமாக பெயரிட்டு அழைத்து தற்போது கல்லறைத் திருவிழா எனக்கூட அழைக்கிறோம். பெயர்கள் வேறுபட்டு இருப்பினும் நோக்கம் ஒன்றுதான், மூலமும் ஒன்றுதான்.
இன்றைய நவநாகரீக உலகில் நம்முடன் கூட வாழ்ந்து வருபவர்களையே நினைப்பதற்கு நேரமில்லாமல் நம்மில் பலர் சுயநலவாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் நம் கண்முன்னே வாழ்ந்து மறைந்தவர்களை நாம் நெஞ்சிருத்தி இந்த மரித்தோர் தினத்தை கடைப்பிடிக்க சிறு நேரத்தை ஒதுக்கியாக வேண்டும்.
மனிதனாகப் பிறந்தவன் இவ்வுலக வாழ்வில் தான் வாழ்ந்த வாழ்க்கையின் பிரதிபலன்களை அவன் இறந்த பின்னரே அனுபவிக்கின்றான். அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கான சம்பாவனை அவனுக்கு மோட்சமாகவோ நரகமாகவோ உத்திரிக்கின்ற ஸ்தலமாகவோ இறைவனால் வழங்கப்படுகின்றது.
மரித்த விசுவாசிகளுக்கு நித்திய இளைப்பாற்றியை அளித்தருளும் ஆண்டவரே முடிவில்லாத ஒளி அவர்கள் மேல் பிரகாசிக்கக்கடவதாக. சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக !
மரித்தோர் அனைவரும் தங்களின் பாவத்திலிருந்து விடுபெற்று நிலையான விண்ணக வாழ்வை பெற்று கொள்ளவேண்டும் என்று இந்த நாளில் நாம் அனைவரும் சிறப்பாக செபிப்போம்.