குமுதினி படுகொலையின் 40ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நெடுந்தீவில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

குமுதினி படுகொலையின் 40 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் (மே15)  காலைமுதல் நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. காலை 9.00 மணிக்கு மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில்

முதன்மை நினைவுச் சுடரினை இந்துமத குரு கா.புவனேந்திரசர்மா அவர்கள் ஏற்றிவைக்க தொடர்ந்து நெடுந்தீவு பங்குத்தந்தை ப.பத்திநாதன் அடிகளார், தென்னிந்திய திருச்சபை வணபோதகர் , பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் , மற்றும் 7 மாத பச்சிளம் குழந்தையை பறிகொடுத்து தானும் படுகாயம் அடைந்து இன்றும் படுகொலையின் சாட்சியாக இருக்கும் விசுவலிங்கம் அன்னலட்சுமி மற்றும் ஏனையோர் நினைவுச் சுடர்களை ஏற்றிவைத்தனர்.

நினைவுத் தூபிக்கான மலர் மாலையினை  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் , குமுதினி நினைவேந்தல் குழு தலைவர் வி.ருத்திரன் ஆகியோர் இணைந்து அணிவித்ததைத் தொடர்ந்து  நிகழ்வில் கலந்துகொண்டோர் மலர் அஞ்சலி செலுத்தி அஞ்சலித்தனர்  .

நினைவேந்தல் குழுமத்தின் தலைவர் விசுவலிங்கம் ருத்திரன் தலைமையில்நினைவேந்தல் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றது.

நினைவுரைகளினை இந்துமதகுரு புவனேந்திர சர்மா , பங்குத்தந்தை ப. பத்திநாதன் , தென்னிந்திய திருச்சபை போதகர், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் , ஊரும் உறவும் நிறுவன திட்ட முகாமையாளர் ஜெயமுருகன், இலங்கை தமிழ் அரசுக் கட்சி நெடுந்தீவு கிளை தலைவர் ச.சத்தியவரதன், பொருளாளர் கு.ஜனேந்திரன் , நெடுந்தீவு பல. நோ. கூ. சங்க தலைவர் எ.அருந்தவசீலன் ,சமூக செயற்பாட்டாளர் யேசுதாசன், ஆகியோர் ஆற்றியிருந்தனர்.

நிகழ்வின்போது  முள்ளிவாய்க்கால் அவலங்கள் நினைவாக தீவக நினைவேந்தல் குழுவினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.




இதேவேளை
காலை 8.00 மணிக்கு  மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம், மாவிலித்துறை சவேரியார் ஆலயம், தென்னிந்திய திருசசபை ஆலயம், மற்றும்  தேவசபை ஆலயம் என்பவற்றில் சம நேரத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்மா சாந்திக்கான வழிபாடுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share this Article