கிளிநொச்சியில் டிப்பர் வாகனத்துடன் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயங்களுக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று(ஓகஸ்ட் 20) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவத்தில், பெரிய பரந்தன் கிளிநொச்சியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 47 வயதான தர்மலிங்கம் நகுலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவர் கடந்த19 ஆம் திகதி விசுவமடு ரெட்பானாவில் இருந்து பரந்தன் நோக்கி மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

12 ஆம் கட்டை விசுவமடுப் பகுதியில் மண் ஏற்றிய நிலையில் பழுதடைந்து வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் நேற்று இரவு 8:30 மணியளவில் மோதி மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவர் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். இதேவேளை, சாட்சிகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் நெறிப்படுத்தினர்.

Share this Article