கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 67 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கடத்தி வந்த, இரு பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (25/10) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சீன நாட்டைச் சேர்ந்த 37 வயதுடைய வியாபாரி ஆவார்.
இவர் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமான சேவைக்குச் சொந்தமான AK-047 என்ற விமானத்தின் மூலம் அன்றையதினம் இரவு 10.45 மணிக்குக் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பையைச் சோதனையிட்ட போது, சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பல்வேறு வகையான 15,000 சிகரெட்டுகள் அடங்கிய 75 சிகரெட் கார்ட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மற்றைய நபர் கொழும்பு, கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய வியாபாரி ஆவார்.
இவர் டுபாயிலிருந்து ஃபிளை டுபாய் சேவைக்குச் சொந்தமான FZ-549 என்ற விமானம் மூலம் இரவு 08.20 மணிக்குக் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.
அவரது 3 பயணப் பைகளைச் சோதனையிட்ட போது, 30,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 150 சிகரெட் கார்டூன்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 27 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.