வேலணை பிரதேசத்தில் வளர்ப்புக் கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சட்டவிரோதமாக கொண்டு சென்று விற்பனை செய்து வந்த திருட்டுக் கும்பல் ஒன்று, வேலணை வங்களாவடியில் பொதுமக்களால் பிடிபட்டு நயப்புடைக்கப்படு ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று (ஒகஸ்ட் 12) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தின் போது 20 வயதுடைய இளைஞர் ஒருவரை பொதுமக்கள் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அண்மைக் காலமாக வேலணை பகுதியில் பெறுமதிமிக்க வளர்ப்புக் கால்நடைகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து, பண்ணையாளர்கள் பெரும் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பொலிசாரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், திட்டமிட்ட இந்த திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்து வந்தது.
இதனால், பொதுமக்கள் தமது கால்நடைகளின் பாதுகாப்பிற்காக வேலணைக்கு வரும் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் மற்றும் நபர்களை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை பட்டா ரக வாகனமொன்றில் 5 பேரடங்கிய கும்பல் வங்களாவடியில் சந்தேகத்துக்கிடமாகச் சுற்றித்திரிந்ததை மக்கள் கவனித்து, அவர்களை பிடிக்க முயன்றபோது, அவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர்.
நிலையைக் கட்டுப்படுத்திய பொதுமக்கள், வாகனத்தை மறித்து அதில் இருந்த ஒருவரையும் இறைச்சியாக்கப்பட்ட மாட்டுடன் கைது செய்து, நயப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
ஏனைய நால்வர் தப்பியோடிய நிலையில், அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.