வருமான வரி செலுத்த செப்டம்பர் 30 இறுதி நாள் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2025/2026ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரிச் செலுத்துகைகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி செலுத்துவோருக்கு அறிவித்துள்ளது.

தண்டப் பணம் மற்றும் மேலதிக வட்டிகளைத் தவிர்ப்பதற்காக, வரி செலுத்த வேண்டிய அனைத்துத் தரப்பினரும் குறித்த திகதிக்கு முன்னரோ அல்லது அன்றைய தினமோ தங்களது செலுத்துகைகளை மேற்கொள்வது கட்டாயமாகும் என திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கம்பனி வருமான வரி, தனிநபர் வருமான வரி மற்றும் பங்கான்மை வருமான வரி ஆகிய அனைத்துக்கும் இந்த அறிவித்தல் பொருந்தும். வரிச் செலுத்தல் தளம் ஊடாகவும், இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் வரிகளைச் செலுத்த முடியும்.

முன்கூட்டியே அச்சிடப்பட்ட செலுத்தல் படிவம் இன்றி வங்கியில் பணம் செலுத்துவோர், செலுத்துகை சரியாகப் பதிவாவதை உறுதிசெய்ய தங்களது ஆவண அடையாள எண்ணை செலுத்தல் படிவத்தில் தவறாது குறிப்பிட வேண்டும்.

வரிகளைச் செலுத்தத் தவறினால் அல்லது தாமதித்துச் செலுத்தினால் மேலதிக வட்டி மற்றும் தண்டப் பணம் விதிக்கப்படும். இவ்வாறு விதிக்கப்படும் வட்டியை எக்காரணம் கொண்டும் தள்ளுபடி செய்யவோ அல்லது குறைக்கவோ முடியாது என திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும், வங்கி வரைவோலை அல்லது கட்டணக் கட்டளைகள் செப்டம்பர் 30 ஆம் திகதிக்குப் பின்னரே பணமாக்கப்பட்டால், அது தாமதமான செலுத்துகையாகவே கணக்கிடப்படும். மேலதிக விவரங்கள் மற்றும் உதவிகளுக்கு 1944 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு வரி செலுத்துவோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Share this Article
Leave a comment