நயினாதீவு மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமானதும் அரிதானதுமான வரலாற்றுச் சான்றாக, பாடசாலையின் முதலாவது சம்பவத்திரட்டுப் புத்தகம் (Log Book) இன் முதலாவது பக்கத்தில் இடம்பெற்றுள்ள பதிவு தற்போது கவனத்தைப் பெற்றுள்ளது.
07.01.1946 அன்று நயினாதீவில் அமைக்கப்பட்டிருந்த பாடசாலையை அன்றைய கல்வி அமைச்சராகப் பணியாற்றிய இலவசக் கல்வியின் தந்தை எனப் போற்றப்படும்
C. W. W. கன்னங்கரா அவர்கள் வந்து ஆரம்பித்து வைத்தமை தொடர்பான அவரது கையெழுத்துப் பதிவு இச்சம்பவத்திரட்டுப் புத்தகத்தின் முதலாவது பக்கத்தில் காணப்படுகின்றது.
அன்றைய நிகழ்வில் முக்கிய அரச அதிகாரிகளும் கல்வித்துறை சார்ந்த உயரதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை தொடர்பான பதிவுகளும் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், தனது பதிவில் எதிர்காலத்தில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு இப்பாடசாலை அடித்தளமாக அமைய வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பையும் கல்வி அமைச்சர்
C. W. W. கன்னங்கரா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
நயினாதீவு மகா வித்தியாலயத்தின் வரலாற்றுச் சிறப்பையும், கல்விப் பயணத்தையும் எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் மதிப்புமிக்க வரலாற்று ஆவணமாக இச்சம்பவத்திரட்டுப் புத்தகம் திகழ்கின்றது.
கல்வி அமைச்சர் C. W. W. கன்னங்கரா அவர்களது குறிப்பின் தமிழாக்கம்…

7ஜனவரி 1946 இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நயினாதீவு Junior School பாடசாலையைத் திறந்து வைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்நிகழ்வில் மாண்புமிகு சர் வைத்தியநாதன் துரைசாமி M.P. அவர்களும், அரச சபையின் நாயகரான திரு. நாதன் E.O. அவர்களும், உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தாயகத்திற்கு ஒரு நல்ல பாடசாலையின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. இந்தப் பாடசாலை எதிர்காலத்தில் உருவாகவுள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு அடித்தளமாக அமையும் என நான் நம்புகிறேன்.
இப்பாடசாலை சிறப்பாக வெற்றி பெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
கல்வி அமைச்சர்
C. W. W. கன்னங்கரா