பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதான போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ரன் மல்லி’ எனப்படும் சரித் சந்தகெலும் பல்கேரியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இன்டர்போலினால் பிறப்பிக்கப்பட்டிருந்த சிவப்பு அறிவித்தல்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் தரவு முறைமைகளின் அடிப்படையில், பல்கேரியப் பாதுகாப்புப் படையினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையை இன்டர்போல் அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, வெளிவிவகார அமைச்சு ஊடாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அவரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தையைச் சேர்ந்த சரித் சந்தகெலும், நீண்ட காலமாக துபாயில் வசித்துக்கொண்டு இலங்கையின் போதைப்பொருள் வலைப்பின்னலை இயக்கி வந்துள்ளார்.
இவர் தற்போது தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தகவின் போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான செயற்பாட்டு உறுப்பினராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சர்வதேச சோதனை நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காகப் போலியான தகவல்களைப் பயன்படுத்தி ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்றபோதே அவர் பல்கேரியப் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது