ரணிலின் தனிப்பட்ட வீட்டுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் – ஸ்ரீரங்கா உட்பட ஆறுவர் விடுதலை!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், போராட்டத்தில் ஈடுபட்ட பிரியத் நிகேஷல, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களையும் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகநபர்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடைகளை நீக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த விடயங்களைப் பரிசீலித்த பின்னரே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதே சம்பவம் தொடர்பாக, சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய முன்னதாக மேலும் ஆறு சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்ததாகவும் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் ஒவ்வொருவர் தொடர்பிலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சட்ட மாஅதிபர் ஆலோசனைகளை வழங்கியுள்ளமை கவனத்திற்குரிய விடயம் எனச் சுட்டிக்காட்டிய நீதவான், வழக்கில் உள்ள அனைத்து சந்தேகநபர்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடைகளை நீக்க உத்தரவிட்டுள்ளார்.

Share this Article
Leave a comment