கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமைபுரியும் கம்பஹாவைச் சேர்ந்த இராணுவ சிப்பாய்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இவரது சகோதரி கல்விபயிலும் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில் நுட்ப பீட வளாகத்தின் அனைத்து பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டுள்ளது.
மாணவிக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும் இன்று திங்கட்கிழமை (ஜூலை 13) மாலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சகோதரனுக்கு கோரோனா உள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவரது சகோதரி கடந்த 8ஆம் திகதி புதன்கிழமை கம்பஹாவில் இருந்து மதவாச்சி வரை தொடருந்தில் வந்திறங்கி, அங்கிருந்து பேருந்தில் கிளிநொச்சிக்கு வந்திறங்கியுள்ளார்.
மாணவியின் உயிரியல் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அதன் பெறுபேறுகள் இன்று மதியத்துக்குப் பின்னரே வெளியாகும்.