டெங்கு பரவுதற்கு ஏதுவான நிலைமைகளைக் கொண்டிருந்த குடியிருப்பாளர்கள் 23 பேருக்கு எதிராக நேற்று (ஜனவரி 3) நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
189 பேருக்கு எதிராக எச்சரிக்கைப் படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை 114 பேர் டெங்குத் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் டெங்கு பரவும் அபாயகரமான இடங்களாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் சோதனை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதேச மட்டங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து முன்னெடுத்து வரும் விசேட வேலைத்திட்டங்களின்போது டெங்குப் பரவலுக்கு ஏதுவாக அபாயகரமான இடங்களாக அவதானிக்கப்பட்டுள்ள இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கை சுகாதார பரிசோதகர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டெங்குத் தொற்று தீவிரமடைந்திருக்கும் நிலையில் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். மக்கள் தங்கள் குடியிருப்புக்கள் மற்றும் அயற்பிரதேசங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். அவற்றைச் சுத்தமாக வைத்திருப்பதுடன், நீர் தேங்கக்கூடிய பொருள்களை அகற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.