மோசமான உடல்நிலையில் சுரேஷ் சலே – சிறைக்கு மாற்ற கோரும் மனைவி!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முன்னாள் புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலேவின் உடல் நிலை மோசமாக உள்ளதாக அவரின் மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரின் மனைவி மனோரி சலே, சுரேஷ் சலேவை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “இருதய நோய் வரக்கூடிய அதிக சாத்தியம் காணப்படுவதாக வைத்தியர்கள் என்னிடம் கூறினார்கள். அவர் தொடர்ந்து உணவு தவிர்த்து வருவதால் இவ்வாறான பிரச்சினைகள் வருகின்றன. அமைச்சர் எதை கூறினாலும் இங்குள்ள வைத்தியர்கள்தான் அவருடைய உண்மையான நிலையை அறிவார்கள்.

அவர் நல்ல நிலையில் இல்லை. எனவே இந்த விடயம் குறித்து விரைவாக ஒரு முடிவு எடுக்க வேண்டும். அதிகாரிகள் சுரேஷ் சலே இறந்து போகும் வரை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர் இறந்து போனால் எல்லாம் சரி.

நாங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கையை நிறுத்துமாறு கூறவில்லை. நடவடிக்கையை முன்னெடுங்கள். ஆனால், நாம் கேட்டுக் கொள்வது, சுரேஷ் சலே சிஐடி தடுப்புக்காவலில் இருந்து சிறைச்சாலைக்கு மாற்றி தருமாறு மட்டுமே. அவரை சிறைச்சாலைக்கு மாற்றி தருமாறு கேட்டே உணவு தவிர்த்து வருகிறார்.

சுரேஷ் சலே, அவரது சட்டத்தரணிகளிடம் எழுத்து மூலம் அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளார். அதில் அவர் தனக்கு உயிர் சேதம் ஏற்படும் பட்சத்தில் அதற்கு பொறுப்பு ஜனாதிபதி, ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன உள்ளிட்ட சிலரை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் அதை செய்ய மறுக்கிறார்கள். சுரேஷ் சலேயை சிறைச்சாலைக்கு மாற்றி அதன் பின்னர் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Share this Article