நெடுந்தீவானது தனியான பிரதேசசெயலக பிரிவாக உள்ளபோதும் போக்குவரத்து சிரமம் காணப்படுகின்ற போதும் இதுவரை மரண விசாரணை அதிகாரி நியமிக்கப்படாமை மற்றும் வைத்தியசாலையில் போதிய வசதிகளோ குளிரூட்டியோ இன்மையால் இவ்வாறான துன்பியல்புகளை தாம் தொடர்ந்தும் எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நீண்ட நெடும் பிரதேசமான நெடுந்தீவு தனி பிரதேச செயலர் பிரிவையும் தனிப்பிரதேச சபையினையும் கொண்டு தனித்து இயங்கும் ஒரு பிரதேசமாகும்.
இப்பிரதேசத்திற்கும் யாழ் பெருநிலப்பரப்புக்கும் இடையே கடல் வழித் தொடர்பு கொண்டிருப்பதும் நாளும் போக்குவரத்துகள் சிரமமானதாக இருக்கின்றமை என்பது யாவரும் அறிந்த விடயம்.
இந்த நிலையில் நெடுந்தீவில் ஏற்படுகின்ற திடீர் மரணங்கள் தொடர்பில் அவற்றை விசாரித்து அதற்கான தீர்வுகளை கண்டு கொள்வதற்கு ஏற்ற வகையில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவர் இதுவரை நியமிக்கப்படாமையால் ஊர் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் பலதடவைகள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் ஆக்கபூர்வமான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அங்கு இடம்பெறுகின்ற திடீர் மரணங்களின் போது இறந்தவர்கள் உடலங்களை வெளியிடத்தில் இருந்து திடீர் மரண விசாரணை அதிகாரி வரும்வரை சம்பவ இடத்திலேயே வைத்திருப்பதும் , உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்வதும் வழக்கமான செயற்பாடாகியுள்ளது.
பரிசோதனைகளுக்காகவும் மரணம் விசாரணைகளுக்காகவும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து வந்து மீள நெடுந்தீவுக்கு கொண்டுசெல்வதற்கான போக்குவரத்து செலவுகளை குடும்பத்தினரே ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இதேவேளை நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் சீரான ஒரு பிரேதஅறையோ, குளிரூட்டல் வசதிகளோ இல்லாத நிலைமை காணப்படுகிறது.
இதன் காரணமாக உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக பெரும் நிதிச்செலவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவேண்டிய நிலை உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இன்று நெடுந்தீவு 13 ஆம் வட்டாரம் செபநாயகபுரத்தை சேர்ந்த 09 மாதமான சிசு மதன் மவுலின், தாய்ப்பால் அருந்தும்வேளையில் ஏற்பட்ட மூச்சுதிணறல் காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்து இறப்பு தொடர்பான வைத்திய பரிசோதனைகளுக்காக குழந்தையின் உடலானது யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.