2026 ஆம் ஆண்டுக்கான பொசன் பூரணை போயா தினம் மற்றும் தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் தற்காலிகமாக மூடுமாறு மதுவரி திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பிரேமரத்னவின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 29 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் பொசன் பூரணை போயா தினத்தை முன்னிட்டு, ஜூன் 28 ஆம் திகதி இரவு மதுபானசாலைகள் மூடப்படும் நேரத்திலிருந்து ஜூன் 30 ஆம் திகதி காலை திறக்கப்படும் நேரம் வரை அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும்.
மேலும், அநுராதபுரத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் தேசிய பொசன் வார நிகழ்வுகளை முன்னிட்டு, ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை குறிப்பிட்ட நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன.
இதன்படி, குறித்த பகுதிகளில் உள்ள மதுபானசாலைகள் ஜூன் 25 ஆம் திகதி இரவு முதல் ஜூலை 3 ஆம் திகதி காலை வரை இயங்க அனுமதிக்கப்படமாட்டாது என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவுகளை மீறி சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை, 24 மணி நேர அவசர சேவையான 1913 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.