போதைப்பொருளுடன் இலங்கையைச் சேர்ந்த 22 தேரர்கள் இன்று காலை கைது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய “குஷ்” மற்றும் “ஹேஷ்” ரக போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இதுவாகும்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய, நேற்று (25/04) இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சந்தேகநபர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்களுக்கு இடையில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமிற்கும் அதிக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேரரின் பயணப் பொதியிலும் தலா 5 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் ஒருவரின் அனுசரணையில் கடந்த 22ஆம் திகதி தாய்லாந்து சென்றிருந்த நிலையில், அங்கு அவர்கள் சாதாரண உடையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவர்களின் கைபேசிகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இதுவென்பதுடன், பௌத்த தேரர்கள் குழுவொன்று இவ்வாறு கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் உயர் கல்வி கற்கும் இளம் தேரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை மேலதிக  விசாரணைகளுக்காக இன்று (26/04) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share this Article