பல மில்லியன் ரூபாய் ஊழல் – ரணிலின் உறவினர் மீது குற்றச்சாட்டு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் தொடர்பில்  குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் அந்த உரிமத்தை தனது நண்பர்கள் இருவருக்கு விற்பனை செய்து பல மில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியதாக சிவில் புலனாய்வு முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சய மகாவத்த குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சஞ்சய மகாவத்த இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

நாட்டில் மதுபான உற்பத்தி உரிமங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே உள்ளதாகவும், தற்போது 13 உரிமங்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான பெறுமதிமிக்க உரிமத்தைப் பெறுவதற்கு பொதுவாக பெருமளவு நிதி முதலீடு தேவைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதியின் உறவினருக்கு இவ்வாறான உரிமம் வழங்கப்பட்டமை, இதன் பின்னணியில் பாரிய ஊழல் இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும் எனவும் மகாவத்த தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் எதிர்வரும் வாரத்தில் முறையான முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் நிரஞ்சன் குமாரவும் கலந்துகொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகளை அவர் விமர்சித்ததுடன், அதனை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்பட ஆதாரங்களையும் முன்வைத்தார்.

மேலும், மாஃபியா உறுப்பினர்களிடமிருந்து இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்படும் மூன்று சட்டத்தரணிகள் தொடர்பிலும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அவர்கள் மீது இதுவரை சட்டத்தரணிகள் சங்கம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் நிரஞ்சன் குமார கேள்வி எழுப்பினார்.

இந்த ஊழல் மற்றும் திறமையின்மை குறித்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Share this Article