நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டு, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (05/08) நடைபெற்றது.
வளிமண்டலவியல் திணைக்கள பிரதிநிதிகள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றதுடன், எதிர்வரும் சில நாட்களில் சீரற்ற காலநிலை நிலவினால் பரீட்சைப் பணிகளைத் தடையின்றி முன்னெடுப்பது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாளை (06/08) நாளை மறுதினம் மற்றும் 8 ஆம் திகதிகளில் மழைக்காலநிலை நிலவினால், பரீட்சைப் பணிகளுக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் செயல்பாட்டு அறையில் விசேட பிரிவொன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வெள்ளப்பெருக்கு ஏற்படுமாயின் அதற்காகப் படகுகள் மற்றும் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டும் உயர்தரப் பரீட்சை நடைபெற்ற நவம்பர் மாதத்தில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அசௌகரியத்திற்கு உள்ளான உயர்தர மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் படகுகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது