நெடுந்தீவு காளாமுனையில் மீன்பிடி உபகரணங்களும், வாடியும் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ள பதிவொன்றிலேயே அவர் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஜனநாயகத்தை மதிக்காத அரசியல் விசமிகளின் இச் செயலை மிகக்கடுமையாக கண்டிக்கிறோம். நெடுந்தீவில் இழைக்கப்பட்டுள்ள முதலாவது தேர்தல் வன்முறைச் செயலான இச்சம்பவம் தொடர்பாக நெடுந்தீவு பொலீசார், கிராம சேவகர், பிரதேச செயலகம் ஆகியவற்றிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைக்குழுவுக்கும் உரிய முறைப்பாடுகள் செய்யப்படவுள்ளன.
செய்யும் தொழிலை தெய்வம் என மதிக்கும் மக்கள் வாழும் நெடுந்தீவில் இப்படியான ஈனச் செயலை செய்வோரை இனங்கண்டு அவர்களை நெடுந்தீவு மக்கள் விரட்டுவார்கள் என்பது திண்ணம்.
வன்முறையை மூலதனமாக கொண்டு அரசியல் செய்யலாம் என்ற நப்பாசையில் செயற்படும் இவர்களை நாம் கோழைகளாகவே கருதுகிறோம். மீண்டும் வன்முறைக் கலாச்சாரத்தை உருவாக்கி அச்சத்தின் மத்தியில் மக்களது அரசியல் உரிமையை விலைபேசலாம் என நினைப்போருக்கு மக்கள் நிச்சயமாக தக்க பதிலை கொடுப்பார்கள் என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.