நெடுந்தீவு பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்று (ஜூலை16) காலை தவிசாளர்சங்கரப்பிள்ளை சத்தியவரதன் தலைமையில் சபையின் மண்டபத்தில்நடைபெற்றதுடன் சகல உறுப்பினர்களும் அமர்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பாக சுற்றாடல் வாழ் வசதிகள் குழு, நிதி மற்றும் கொள்கைகள் உருவாக்கும் குழு, வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்திக் குழு, தொழிநுட்ப சேவைக் குழு, பெறுகைக் குழு என்பன சகல உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
வடக்கு மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதி மூலம் இவ்வருடம் மேற்கொள்ளவென சுற்றுலா மற்றும் வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை குறித்த திட்டங்களுக்கு பயன்படுத்தும் வகையில் சபை அனுமதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை சுற்றுலா மற்றும் வரி வருமானங்களை பெறுதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் , இது தொடர்பில் அடுத்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெடுந்தீவினை தூய்மையாக வைத்திருப்போம் எனும் தொனிப்பொருளுக்கிணங்க முதல் வேலைத்திட்டமாக சமூக மட்ட அமைப்புக்களின் பங்களிப்புடன் நெடுந்தீவு பிரதான வீதியின் இருமருங்கினையும் துப்பரவு செய்ய தீர்மானிக்கப்பட்டதுடன் அதனை இவ் வாரம் முதலே நடைமுறைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்போது மக்களால் அவர்களது நலன்களை முன்னெடுக்கவென்றே நாம் இச்சபைக்கு வந்துள்ளோம். அந்த மக்களின் எதிர்பார்ப்புக்களைமுன்னெடுக்கும் வகையில் சபையின் செயற்பாடுகள் இருப்பது அவசியம் எனவே அனைத்து உறுப்பினர்களும் இணைந்து செயற்படவேண்டும் என நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் தனது உரையில் தெரிவத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
பிரதேசத்தின் கடந்தகாலத்தில் முன்னெடுத்து தொடரப்படவேண்டிய மற்றும்எதிர்காலத்தில் முன்னகர்த்தப்படவுள்ள பல்வேறு அவிருத்தி மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னொழிவுகள் குறித்து சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டுஉறுப்பினர்களால் அவற்றின் ஏதுநிலைகள் குறித்து பரஸ்பரம் விவாதிக்கப்பட்டுசிலவற்றுக்கு தீர்வுகளும் எட்டப்பட்டமை சிறப்பாகும்.