தீவகக் கல்வி வலய தரம் 1 மாணவர்களுக்கான கண்பார்வைப் பரிசோதனைச் செயற்றிட்டம்!!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

தரம் 1 மாணவர்களின் கண்பார்வை நலனை உறுதிப்படுத்தும் நோக்கில், Grade One Eye Screening Programme – Stage II கண்பார்வைப் பரிசோதனைச் செயற்றிட்டம் 2026  கடந்த மாத இறுதியில் வேலணை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

கண் வைத்திய நிபுணர் மு.மலரவன் அவர்களின் முழுமையான திட்டமிடல், ஒழுங்குபடுத்தல் மற்றும் முன்னெடுப்பில் வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஒத்துழைப்பில் வலயக் கல்வி அலுவலகம் தீவகத்தினால் நடாத்தப்பட்டது.

தீவகக் கல்வி வலயத்திலுள்ள தரம் 1 இல் கல்வி பயிலும் 543 மாணவர்களையும் இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இச்செயற்றிட்டத்தில், 487 மாணவர்கள் பங்குபற்றி கண்பார்வைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இது மொத்த மாணவர்களில் 89.7% ஆன மாணவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமையைக் குறிக்கின்றது.

பரிசோதனையின் மூலம் 45 மாணவர்களுக்குப் பார்வை ஒளிவிலகல் குறைபாடுகள் (Refractive Errors), 2 மாணவர்களுக்குக் கண் மாறுகண் நிலை (Squint), 2 மாணவர்களுக்குக் கண் ஒவ்வாமை தொடர்பான பாதிப்புகள் மற்றும் ஒரு மாணவருக்கு ஏனைய கண் பாதிப்பு ஆகியன அடையாளம் காணப்பட்டன. மேலும், ஒரு மாணவர் ஏற்கனவே மூக்குக்கண்ணாடி பயன்படுத்தி வந்தார். இவ்வாறு ஆரம்ப நிலையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பார்வைக் குறைபாடுகள் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள், கல்விச் சாதனைகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இவ்வாறான பரிசோதனைகள் மூலம் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய மருத்துவ ஆலோசனை, சிகிச்சை மற்றும் பார்வைத் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.

இச்செயற்றிட்டத்தின் கீழ் மூக்குக்கண்ணாடிகள் தேவைப்படும் மாணவர்களுக்கு Nahuleswary Vasudevan இலவச மூக்குக்கண்ணாடி விநியோகத் திட்டத்தின் ஊடாக அவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு Alaka Foundation நிதியுதவி வழங்கியுள்ளதுடன், Asst RR (UK & Sri Lanka) அமைப்பின் ஊடாகச் செயற்படுத்தப்படுகின்றது. மாணவர்களுக்கான மூக்குக்கண்ணாடிகள் 10 வேலைநாட்களுக்குள் விநியோகிக்கப்படவுள்ளன.

ஒவ்வொரு குழந்தைக்கும் தெளிவான பார்வை; ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த கற்றல் வாய்ப்பபு

மாணவர்களின் சுகாதாரம், நல்வாழ்வு மற்றும் கல்வி அடைவுகளை மேம்படுத்தும் இத்தகைய செயற்றிட்டங்கள் தீவகக் கல்வி வலயத்தின் கல்வி மேம்பாட்டுப் பயணத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.

Share this Article
Leave a comment