தனியார் வங்கிகளும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டவை – ஆணைக்குழு அதிரடித் தீர்ப்பு !

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் வழங்கப்பட்ட உரிமத்தின் கீழ் இயங்கும் தனியார் வங்கி ஒன்று 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ‘பொது அதிகார சபை’ என்ற வரையைறைக்குள் அடங்கும் என தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு தீர்ப்பளித்துள்ளது.

சனச அபிவிருத்தி வங்கியின் வாடிக்கையாளரான உதார ரணசிங்க தனது வட்டி வீதம் எவ்வாறு மீளாய்வு செய்யப்பட்டது என்பது குறித்த தகவல்களைக் கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த போதே ஆணைக்குழு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

குறித்த தகவல் கோரிக்கைக்கு வங்கி தரப்பிலிருந்து கடந்த 2025 ஏப்ரல் 9 ஆம் திகதி மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்பப்பட்டிருந்தது. எனினும் அந்த பதிலில் திருப்தியடையாத வாடிக்கையாளர் தகவல் அறியும் ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்திருந்தார்.

தேவையான தகவல்கள் ஏற்கனவே நான்கு சந்தர்ப்பங்களில் மின்னஞ்சல் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் வங்கி 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொது அதிகார சபை என்ற வரையறைக்குள் வராது என்றும் வங்கி தரப்பில் வாதாடப்பட்டது.

தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவர் தயாரத்ன லங்காபுர சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜெயவர்த்தன மற்றும் ஆணையாளர் ஏ. முஹம்மது நஹியா ஆகியோர் அடங்கிய குழு முன்னிலையில் இந்த மேன்முறையீடு விசாரிக்கப்பட்டது .

கடந்த 2026 ஒக்டோபர் 21 ஆம் திகதியிடப்பட்ட RTC/Appeal/1005/2025 இலக்கத் தீர்ப்பில் வங்கியின் வாதத்தை ஆணையம் முற்றிலுமாக நிராகரித்தது.

மத்திய வங்கியின் நாணய சபையின் உரிமத்தின் கீழ் இயங்கும் தனியார் வங்கியும் இந்தச் சட்டத்தால் விதிக்கப்பட்ட பொது அதிகார சபையின் சட்ட வரையறைக்குள் வரும் என ஆணையம் தீர்ப்பளித்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 3 (1) இன் பிரகாரம் பிரிவு 5 இன் விதிகளுக்கு உட்பட்டு பொது அதிகார சபை வசம் உள்ள தகவல்களை பெற ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு மேலும் சட்டத்தின் 43 ஆவது பிரிவு பொது அதிகார சபை என்பதை வரையறுக்கிறது.

இந்த ஆணைக்குழுவின் தீர்ப்பு மத்திய வங்கி உரிமத்தின் கீழ் இயங்கும் தனியார் வங்கிகளுக்கு குறித்த வரையறை எவ்வாறு பொருந்தும் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளதுடன் இத்தகைய நிறுவனங்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிற்கு உட்பட்டவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

Share this Article
Leave a comment