எயார்பஸ் கொள்வனவு மோசடி – சமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செவ்வாய்க்கிழமை (08/09) ஆஜராகியிருந்தார்.

கொழும்பு 7, மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செவ்வாய்க்கிழமை காலை ஆஜரான அவரிடம், அதிகாரிகள் சுமார் ஒன்றரை மணிநேரம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளனர்.

ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாகவே அவர் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததன் பின்னர் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.

இதேவேளை, சர்ச்சைக்குரிய இந்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் மோசடி சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment