ஆலய திருவிழாக்களில் சுகாதார நடைமுறை பின்பற்றபடுவதில்லை- அரச அதிபர் தெரிவிப்பு
யாழ். மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்களில் சுகாதார நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படாமை கவலையளிக்கிறது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
தற்போதைய கொரோனா நிலைமையில் அரசாங்கத்தால் புதிய சுகாதார நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
வழிபாட்டு இடங்களில் 50 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வழிபாட்டு இடங்களில் இந்த நடைமுறையை பொதுமக்கள் அனுசரித்துச் செல்லவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறு அலட்சியப்படுத்துவதை விடுத்து சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த சுகாதார நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டன.
எனவே, ஆலயங்களில் 50 பேருக்கு மேல் ஒன்றுகூடுவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இந்த விடயங்களை ஆலய பரிபாலன சபையினர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் கண்காணித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
வழிபாட்டு இடங்களில் இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது எனத் தெரிவித்தார்.