அல்லைப்பிட்டியில் சூடு – 15 சாட்சிகளிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

யாழ் அல்லைப்பிட்டியில் 17 வயது தமிழ் சிறுவன் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆறு மாதங்களுக்குப் பின்னர் இடம்பெற்ற வழக்கு விசாரணையில், சிறுவனின் குடும்பத்தினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரியதைத் தொடர்ந்து, செப்டெம்பர் 4ஆம் திகதி 15 பேரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி ஆரம்ப விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வட்டுக்கோட்டை சித்தங்கேணியைச் சேர்ந்த அல்பினோ அருள் பியுஸ் எனப்படும் அயூப்ராஜ் அருள் கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி அதிகாலை அல்லைப்பிட்டி பகுதியில் ஹயஸ் வாகனத்தை செலுத்திச் சென்றபோது பொலிஸாரால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். அதிகாலை சுமார் 1.15 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், வாகனம் பொலிஸாரின் உத்தரவுக்கு இணங்க நிறுத்தப்படவில்லை எனக் கூறி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக 17 வயதிலேயே சாரதியாகப் பணியாற்றிய அருள், தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக வேலணைக்குச் சென்றுகொண்டிருந்தபோதே பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், துப்பாக்கிக் குண்டு அவரது நெற்றியில் ஊடுருவி மூளையைத் துளைத்துச் சென்றமை தெரியவந்தது.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் இடம்பெற்றதுடன், பொலிஸாரை கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆரம்ப விசாரணையில் சிறுவனின் வயது தொடர்பாக பொலிஸார் தவறான தகவலை வழங்கியதாகவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். மேலும், துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளிலிருந்து வந்தவை என ஆரம்ப அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், குறித்த இருவரும் கைது செய்யப்படவில்லை என குடும்பத்தினர் சார்பிலான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர். இதனையடுத்து விசாரணை கொழும்பைத் தளமாகக் கொண்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிக்கையின் அடிப்படையில் இரண்டு பொதுமக்கள், ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரிகள், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், நீதித்துறை வைத்திய அதிகாரி உள்ளிட்ட மொத்தம் 15 சாட்சிகளிடம் ஆரம்ப விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆறு மாதங்களாக நீடித்து வரும் இந்த வழக்கில், நீதியைப் பெற்றுத்தருவதற்கான முக்கிய கட்டமாக இந்த விசாரணை கருதப்படுகிறது.

Share this Article
Leave a comment